Friday, April 13, 2012

Ok Ok (Oru Kal Oru Kannadi) Tamil Movie Review in Tamil

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

எழுத்து - இயக்கம்: ராஜேஷ் எம்

தயாரிப்பு - ரெட் ஜெயன்ட்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று 'பாஸ்ட் பார்வர்டு' கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள்.

ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.

குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான்...

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!

0 comments:

Post a Comment

 
Powered by Blogger